அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
ஒரு பாப்பா வேண்டும்..!
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
ஒரு பாப்பா வேண்டும்..!
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
ஒரு பாப்பா வேண்டும்..!
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
சின்னத்தவறு செய்து நீ விரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..அந்த கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்குகிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..-என்
மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..