கல்லூரி வரை என் வாழ்வோடு
கலந்திட்டவனே...என்
காலம் முழுதும் என்னோடு
கலந்திட மாட்டாயா..?
வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.?
இல்லற வாழ்க்கையிலே..
என் மன சம்மதமின்றி..
இனி இது தான் வாழ்வென
ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
நல்வாழ்க்கை வாழும் முன்..
நாசமாகி போனதே.!. திடீரென
உண்டான இதயத்தின் வலிதனில்
அவரிதயம் செயலிழந்து போனதே..
என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!
எல்லாம் முடிந்ததென்று..
என்னிலை நினைத்து அழுதிடுகையில்
என்னருகில் வந்து சேர்ந்தாய்..
என் நிலை கண்டு துவண்டு போனாய்..
துடிதுடித்துப்போனாய்..அதோடு.
வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
விரல்கள்..வதங்கிய என் முகத்தை
தாங்கிய உன் தோள்கள்..
“உன் வாழ்வு முடியவில்லை..
என்னோடு தொடரும் இனி.”
என்றுரைத்த உன்பேச்சு.
என் மனம் ஏங்கினாலும்..
ஊராரின் பேச்சுக்குள்...
உலகத்தின் பார்வைக்குள்..
ஊமையாகிப்போன என் காதலும்
ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
எனக்கிட்டு இட்டு வேசியின் நிலையில்
நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!
உன் வாழ்வு நலமாகட்டுமென..
உன்னை மறுத்து..என் மனதை
மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
விதவை எனும் பெண்ணின் நிலை..
என்றுமே..இதுவே என நினைத்து..
சில நேரம் விக்கித்து அழுகிறேன்.
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..